Thursday 9th of May 2024 09:04:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையின் சுதந்திர தினமும் தமிழ் மக்களின் பேரெழுச்சியும்! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கையின் சுதந்திர தினமும் தமிழ் மக்களின் பேரெழுச்சியும்! - நா.யோகேந்திரநாதன்!


எதிர்வரும் பெப்ரவரி 4ம் நாள் பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து 1957ம் ஆண்டு தொட்டு தமிழ் மக்கள் சுதந்திர தினத்தைப் பகிஷ்கரித்து வருகின்றனர். திருமலையில் 1957ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம்நாள் ஏற்றப்பட்டிருந்த இலங்கையின் தேசியக் கொடியை இறக்க முயன்ற திருமலை நடராசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு இலங்கையின் தேசிய தினம் தமிழ் மக்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு துக்க தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. 2015ம் ஆண்டு மைத்திரிபால – ரணில் கூட்டரசாங்கம் உருவான பின்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மேடையில் நின்று இலங்கையின் தேசியக் கொடியை ஒன்றாக உயர்த்திப் பிடித்து இலங்கையின் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டார். தமிழரசுக் கட்சியின் சுதந்திரதின பகிஷ்கரிப்பு, சிங்கள தேசியக் கொடி எதிர்ப்பு என்பன இவராலேயே முதல்முதலாக பகிரங்க மேடையில் வைத்துக் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

1948ம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டாலும்கூட அது தொடர்ந்து பிரித்தானியாவின் அரைக்குடியேற்ற நாடாகவே விளங்கியது. பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியான மகாதேசாதிபதி கையெழுத்திட்டதில் மட்டுமே இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டமும் செல்லுபடியாகும் என்பது அரசியலமைப்பு மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் மகாதேசாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் அவரே முப்படைகளின் தளபதியாகவும் விளங்கினார். மேலும் நீதித்துறையிலும் இலங்கையின் நீதிமன்றங்களின் தீர்ப்பை ரத்துச் செய்யும் அதிகாரம் லண்டன் பிரிவு கவுன்சிலுக்கு இருந்தது. அத்துடன் பிரித்தானிய கடற்படைத்தளம், விமானப் படைத்தளம் என்பன திருமலையிலும் கட்டுநாயக்கவிலும் அமைந்திருந்தன. அதாவது பிரித்தானியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே போகாத ஒரு அரைச் சுதந்திரமே இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட பின்பே இலங்கை பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு ஒரு பூரண சுதந்திர நாடாகியது. ஆனால் தொடர்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள், அதைத் தங்கள் பெரும்பான்மையைப் பயன்படுத்தி சிங்கள மக்களுக்கு மட்டுமளவான சுதந்திரமாக வடிவமைத்துக் கொண்டனர். சிங்களவர் தவிர்ந்த ஏனைய இனங்கள் ஆளப்படும் இனங்கள் என்பதே நடைமுறை அரசியலானது.

அவ்வகையில் 1956ல் தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்தகாலம் தொட்டுத் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய நிலையே உருவாகி விட்டது. முதலில் ஜனநாயக வழியில் ஆரம்பித்த போராட்டம் பின்பு ஆயுதப் போராட்ட வடிவம் எடுத்துப் பெரும் போராக வெடித்தது. தற்சமயம் போர் முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட போதிலும் இன ஒடுக்குமுறைகள் மேலும் கொடூரமாக தமிழ் மக்களைச் சுதந்திரமற்ற மனிதர்களாக மாற்றி வருகின்றன. 1948ல் மலையக மக்களின் குடியுரிமை பறிப்பாக ஆரம்பித்து 1950ல் குடியேற்றத் திட்டங்கள் மூலம் நில ஆக்கிரமிப்பாக, விரிவடைந்து 1956ல் மொழியுரிமைப் பறிப்பாக விருத்தியடைந்தது.

ஆயுதப் போராட்ட காலத்தில் இனஒடுக்குமுறை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட முடியாத நிலை உருவாகியது. ஆனால் 2009ல் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பல முனைகளில் வீச்சுடன் முன்னெடுக்கப்படத் தொடங்கின. அவை தற்சமயம் இன, மத, கலாசார, வாழிட தனித்துவங்களைச் சிதைக்கும் வகையில் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் நிறுவனப்படுத்தப்பட்ட வகையில் ஒருபுறம் ஆயுதப் படைகள், நீதி நிர்வாகம் என்பவற்றாலும் மறுபுறம் தொல் பொருள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம் வன ஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்திச் சபை என்பவற்றாலும்; தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையை முழுமையாகவே ஒரு பௌத்த சிங்கள நாடாக்கும் வகையில் தமிழ், முஸ்லிம் மக்களின் இன, மத தனித்துவங்களை வேருடன் அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில்தான் தமிழ் மக்கள் இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை கொரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் எதிர்வரும் 2021 பெப்ரவரி 4ம் நாள் சந்திக்கிறோம். இலங்கையின் தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கத்தாலும், அரச இலைகளாலும் சிங்கள பௌத்த அடையாளத்தால் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு சிறிய செம்மஞ்சள் கோடாக ஒடுக்கப்பட்ட நாம் தேசிய கீதத்தைக்கூட எமது மொழியில் பாடும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கையின் சுதந்திரத்துக்கும் எமக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். சம்பந்தம் உண்டு. அதாவது தேசியக் கொடியில் மட்டுமின்றி சகல நடைமுறைகளிலும் எமக்கு உரிமையான, எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட அத்தனையையும் பெறவேண்டிய தேவை உண்டு.

எனவேதான் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 3, 4, 5 திகதிகளை அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்ப்புத் தினமாக முன்னெடுக்கும்படி சிவில் சமூக தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த எதிர்ப்புத் தினமானது ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லிம் இனத்தவர்களாலும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினதும் எதிர்ப்புக் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஒவ்வொரு விடயத்தையும் தங்கள் கட்சிகளின் நலன்களுடாக அணுகும் வகையில் அவர்கள் காத்திரமான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் தகைமையை இழந்து விட்டனர். எனவே, அத்தகைய பணிகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு சிவில் அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ளது. அனைவரையும் ஐக்கியப்படுத்தக் கூடிய நேர்மையும், வலுவும், உறுதியும், அரசியல் கட்சிகளால் இழக்கப்பட்ட நிலையில் தற்சமயம் சிவில் அமைப்புகள் முன்வந்தமை ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகும்.

எந்தவொரு போராட்டமும் குறிப்பிட்ட ஒரு காலச் சூழலில் அதற்கேற்ற வடிவத்திலும் பொருத்தமான வீச்சுடனும் முன்னெடுக்கப்படும்போது அது வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கும்.

அவ்வகையில் இலங்கை ஆட்சியாளர்களின் அராஜகப் போக்குக்கு எதிராக ஒரு வலுவான சர்வதேசச் சூழல் உருவாகியுள்ளது. எனவே எமக்கெதிரான அநீதிகளைக் கண்டித்து எமது குரல்கள் ஒன்றுதிரண்டு ஓங்கி ஒலிப்பதற்கு இது மிகப் பொருத்தமான தருணமாகவே விளங்குகிறது.

உலக நாடுகள் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக நேர்மையாகவும் தீவிரமாகவும் களமிறங்குவார்கள் என நாம் எதிர்பார்த்தோமானால் அதை விடச் சிறுபிள்ளைத்தனம் வேறு இருக்கமுடியாது.

ஆனால் அவர்களின் பூகோள, பிராந்திய நலன்கள் பாதிக்கப்படும்போது அவை தங்கள் நலன்களைப் பாதுகாக்க ஜனநாயகம், போர்க் குற்றங்கள், மனிதகுல விரோத நடவடிக்கைகள் என்பவற்றைக் கையில் எடுத்துக் கொள்வார்கள்.

இலங்கையைச் சீனாவின் இந்து சமுத்திர மேலாதிக்கத்தின் கேந்திரமாக மாற்றும் இலங்கையின் முயற்சிகளின் மீது சர்வதேசம் ஒரு மென்போக்கையே கடைப்பிடித்து வந்தது. ஏனெனில் கடுமையாக இறுக்கினால் அது இலங்கையை முற்றாகச் சீனா பக்கம் தள்ளிவிடக்கூடும். ஆனால் தற்சமயம் இலங்கை கட்டுமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவும், சர்வதேசமும் தங்கள் பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளன. தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி, கடல் உணவு ஏற்றுமதி, சுற்றுலாத்துறை என இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டக்கூடிய பொருளாதாரம் மேற்கு நாடுகளின் நாணயக் கயிற்றிலேயே உள்ளன என்பதும் ஒரு முக்கிய விடயமாகும்.

2016ல் ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்த சர்வதேச நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டனவோ அவ்வாறான ஒரு நிலை தற்சமயம் தோன்றியுள்ளது. அதன் அறிகுறியே ஐக்கிய நாடுகள் ஆணையாளர் மிச்லெட் அம்மையாரின் காட்டமான அறிக்கையாகும். சர்வதேச நாடுகள் தத்தம் நாடுகளில் இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான புலன்விசாரணைகளையும், நீதி விசாரணைகளையும் நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு பயணத்தடை விடுப்பதுடன் சொத்துகளை முடக்க வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு உடனடியாகவே பிரிட்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதாவது இலங்கை ஆட்சியாளரின் இராணுவ மயப்படுத்தல், போர்க்குற்றங்கள், மனித குல விரோத நடவடிக்கைகள் என்பவற்றை சர்வதேசம் இலங்கைக்கு எதிரான ஆயுதங்களாகக் கையில் எடுத்துள்ளன. இலங்கை அரசின் இத்தகைய போக்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் நாம் என்ற வகையில் இந்நிலைமைகள் எமக்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளன.

ஆனால், எமது உறுதியும், எழுச்சியும் முழுமையாக வெளிப்படுத்தப்படாவிட்டால் இந்த நிலைமையை சர்வதேசம் தமது பூகோள பிராந்திய நலன்களை அடைவதுடன் மட்டுப்படுத்தக்கூடிய அபாயம் உண்டு. 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நல்ல சூழல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கிய தேசியக் கட்சி விசுவாசம் காரணமாக எமக்குப் பயன்படாமற் போனது குறிப்பிடத்தக்கது.

எனவே சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவில் அமைப்புகள் மேற்கொள்ளும் போராட்டம் வலிமையும் உறுதியும் மிக்கதாக உலகத்தின் முன் எமது அபிலாஷைகள் தவிர்க்க முடியாதவையாக மிளிர எமது மக்களின் முழுமையான ஆதரவும் பங்களிப்பும் வழங்கப்படவேண்டும். தனித்தோடும் போக்குகள் களையப்பட்டு அனைவரும் ஒரே சக்தியாக எழுச்சி கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒன்றிணைந்து எழுச்சிபெறும் அற்புத தருணம் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் குரலாக சர்வதேச அரங்கில் காதுகளை அதிர்க்கும் போது அது மிகப் பெறும் சக்தியாக மேலெழும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொண்டு அதற்கேற் வகையில் எமது உறுதியான ஆதரவை வழங்கவேண்டும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்

03.02.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE